Links

Sunday, February 3, 2013

IRCTCயும்...Lower பெர்த்தும்


“டேய் பத்தரை மணி ஆகுது!!! இன்னும் குளிக்கக்கூட இல்லை, எப்போ குளிச்சு எப்போ சாப்பிடுவ ?” அம்மாவின் அதட்டல்.

அந்த அதட்டலுக்குள் இருந்த அன்பு இந்த IRCTCக்கு எப்படி புரியும்

“இரும்மா இந்த தட்கால் டிக்கெட் புக் பண்ணிட்டு வரேன், இப்போ விட்டா அப்புறம் கிடைக்காது, ஏற்கனவே முக்கால் வாசி டிக்கெட் காலி ஒரு அம்பது டிக்கெட் தான் மிச்சம், எப்படியாவது புக் பண்ணனும்ன்னு பார்த்தா முடிய மாட்டேங்குது”

நீங்கள் இந்தியாவில் கம்ப்யூட்டர் வைத்திருக்கும் ஒரு சராசரி குடிமகன் என்றால் இந்த IRCTCயிடம் கண்டிப்பாக ஒரு முறையாவது மாட்டியிருக்க வேண்டும், காதலில் மாட்டுவது போல...


காதலுக்கும் இந்த ரயிலுக்கும் தான் எத்தனை ஒற்றுமை
இரு தண்டவாளங்கலான ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் காதல் என்ற ரயில், தண்டவாளங்கள் சேர்ந்தாலும், பிரிந்தாலும் ரயில் சென்று சென்றுகொண்டே இருக்கும், அது போல் காதலர்கள் இணைந்தாலும், பிரிந்தாலும் அந்தக் காதல் என்றும் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும்.

இப்போது ஏன் காதலை பற்றி பேசுகிறேன் என்றால் நான் IRCTCயில் இருக்கும் இடம் அப்படி, வங்கி பட்டுவாடா முடிந்து டிக்கெட் கிடைகும்மா கிடைக்காதா என்ற நிலைமை. இந்த IRCTC வலைதளத்தை டிசைன் செய்தவன் பல ப்ளாக் அண்ட் வைட் படம் பாத்திருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த காலத்தில் flash back சொல்லும்போது காட்டும் அந்த சுழலை இப்படிப் பயன் படுத்தியிருக்க முடியாது.

“கடந்த காலத்தை சொல்ல பயன்பட்ட ஒரு பொருள் இப்போது வருங்காலத்தை முடிவு செய்கிறது”

முன்பு சொன்னது போல் காதலுக்கும் ரயிலுக்கும் பெரிய வித்தியாசமில்லை இரண்டும் நம்மை பாடாய் படுத்தி இறுதியில் கண்டபடி பிதற்றவைக்கிறது. ஆனால் இந்த IRCTC நம் காதலை விட ஒரு படி மேல், ஒரு பெண்ணிடம் நம் காதலை சொல்லும் போது அவள் முகத்தை வைத்தே நம் வெற்றி தோல்வியை கொஞ்சம் தீர்மாணிக்க முடியும் ஆனால் இந்த வலை தளத்தில்  வங்கி பட்டுவாடா ஆனாலும் டிக்கெட் கிடைப்பதில் வெற்றி தோல்வியை அந்த ஆண்டவனாலும் முடிவு செய்ய முடியாது.

“ஒரு பெண்ணின் மனதை விட ஆழமான விஷயம் இந்த IRCTC!!!!!

“என்னடா டிக்கெட் வந்திருச்சா “ அம்மா கேட்க

“டிக்கெட்டா!! வருருரும்....... ஆனா வராது“

“இதுக்குத் தான் அப்போவே சொன்னேன்... பொங்கலுக்கு மூணு மாசத்துக்கு முன்னாடியே டிக்கெட் எடுத்து வைன்னு, நீ தான் கேட்கவே இல்லை, நான் கூட தான் ஒரு கல்யாணத்துக்காக நாளைக்கு ஊருக்கு போறேன், ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே எடுத்து வைக்கல”

அம்மா சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை, என் காதலியிடம்... மன்னிக்கவும் IRCTCயிடம்.... என் மனதை..... மீண்டும் மன்னிக்கவும் என் பணத்தை ஒப்படைத்திருக்கிறேன்.
ஒரு சில வினாடிகள் கழித்து அவள் சிரித்தாள் “CONFIRM S5/0025/LB”

“அப்பாடா ஒரு வழியா!!!!” என நான் பெருமூச்சு விட
அம்மா அடுப்பங்கறையில் இருந்து கொண்டே “என்னடா கிடைச்சிடுச்சா, முன்னாடியே எடுத்து வச்சா இந்த பிரச்சனை வருமா ?”

நேராக அம்மாவிடம் சென்றேன், “முன்னாடியே எடுத்தா மட்டும் கிடைச்சிடுமா, நீ கூடத்தான் ரெண்டு மாசம் முன்னாடி எடுத்த... வெய்டிங் லிஸ்ட்ல தானே இருக்கு”

“வெய்டிங் லிஸ்ட் எல்லாம் கிடையாது போன வாரமே RAC வந்துருச்சு, சும்மா சோம்பேறித்தனமா டிக்கெட் புக் பண்ணாம காரணம் சொல்லாத, இத்தனைப் பேர் ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடியே புக் பண்றாங்களே அவுங்கலாம் என்ன பைத்தியமா...”

அதுக்கு நான் பதில் சொல்ல முற்பட அம்மா, “நீ ஒன்னும் சொல்லத்தேவையில்லை, போய் குளிச்சிட்டு வா, தோசை போட்டு வைக்கிறேன், இன்னைக்கி சனிக்கிழமை ஆஞ்சிநேயர் கோயிலுக்கு போயிட்டு வா...”

இதற்கு மேல் பேசினால் சண்டையில் தான் போய் முடியும், அம்மா சொன்னதை செய்யக் கிளம்பினேன்.    

ஒவ்வொரு முறையும் பெங்களூரில் இருந்து சென்னை வந்து நான் கழித்த வாரஇறுதி நாட்களுக்கும் இந்த முறையும் பெரிய வித்தியாசமில்லை, ஒரு நாள் வீட்டில் அம்மா சமைத்த சாப்பாடு, அடுத்த நாள் நண்பர்களுடன் பெசன்ட் நகர், சத்யம் தியேட்டர் என வழக்கம் போல் சென்றது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று நான் கிளம்ப வேண்டிய நாள், நாளை மீண்டும் அதே ஆபீஸ் அதே வேலை, பண்டிகைக்கு வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கி விட்டு மீண்டும் வேலைக்காக வெளியூர் செல்லும் போது நம் மனதில் ஏற்படும் அந்த வெறுப்பு கலந்த சோகத்தை அனுபவித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.

“டிக்கெட் எல்லாம் எடுத்து வச்சிகிட்டியா, நானும் ஊருக்கு கிளம்பிடுவேன் அப்புறம் அது எங்க இது எங்கன்னு கேட்கக்கூடாது ” அம்மா சொல்ல

“எல்லாம் கரெக்டா இருக்கு நீ மொதல்ல கிளம்பு", என சொல்லியபடியே அன்று போராடி புக் செய்த டிக்கெட்டை பார்த்தேன், “CONFIRM S5/0025/LB” அட இந்த விஷயத்தை பார்க்கவே இல்லையே அதிசயமா லோவர் பெர்த் வந்திருக்கு.

வழக்கமா IRCTCல டிக்கெட் கிடைக்கிறதே அபூர்வம் இதுல லோவர் பெர்த் கிடைக்கிறது சத்யம் தியேட்டர்ல பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ டிக்கெட் கிடைக்கிற மாதிரி. இப்படி போய் பல மாசங்கள் ஆச்சு, எப்போதுமே எனக்கு புடிக்காத Side Upper சீட் மட்டுமே வரும்.

ஏன் அந்த பெர்த் மேல அப்படி ஒரு வெறுப்பு?  ஆறு அடிக்கு மேல வளந்தவுங்க இந்தியாவில Travel பண்ணவே கூடாது. பிளைட், பஸ், ட்ரைன், கார் என எல்லா இடத்துலயும் அடிவாங்காம இருக்கவே முடியாது. ஒரு தடவை சிட்டி பஸ்ல என் தலை பஸ்ஸோட கூரையில படுறத பார்த்துட்டு அந்த பஸ் கண்டக்டர்

“தம்பி நீங்க வேணும்னா கொஞ்சம் படிக்கட்டுல வந்து நில்லுங்க”,

ஒரு கண்டக்டரே வந்து படிக்கட்டுல நிக்க சொன்ன ஒரே ஆள் நானா தான் இருப்பேன், அந்த அளவுக்கு வளந்து தொலைச்சிட்டேன், வழக்கமா Side Upper பெர்த்ல நாலா மடிஞ்சு மடிஞ்சு படுக்க வேண்டியிருக்கும். இந்த தடவை ஏதோ நல்ல நேரம் போல டிக்கெட் அதுவும் லோவர் பெர்த் கிடைச்சிருக்கு.

மணி 9:15 சென்ட்ரல் ரயில் நிலையம்:

ஞாயிற்று கிழமைகளில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூர் எக்ஸ்பிரஸில் பயணித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும், அந்த ரயிலுக்கு IT எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்கலாம், அத்தனை சாப்ட்வேர் மக்களை அந்த ரயிலில் பார்க்கலாம்.


சிலர் ரயில் நிலையம் வந்த உடனே வேலையைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள், அதிலும் சில ஞாணசூனியங்கள் அங்கேயே லேப்டாப்பை திறந்து அவுட்லூக்கில் மெயில் அனுப்பிக்கொண்டிருக்கும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டே என் ரயில்பெட்டி வாசலருகே உள்ள பயணிகள் பட்டியலை பார்த்தேன்,

25 – Ragunathan   M 25
26 – Nirmal       M 30
27 – VasanthKumar M 34
28 – Ragini       F 23

கைவிரல் 28டில் நின்றது, இன்று நமது அதிர்ஷ்டம் எப்படி என்று பார்க்கலாம் என முடிவு செய்தேன், அதை விட முக்கியம் நாங்கள் இருவரும் எதிரெதிர் லோவர் பெர்த், அந்நியன் படத்தில் அந்த ரயில் காட்சி மனதில் லேசாக எட்டிப் பார்த்தது. எல்லாவற்றை விட இன்பமான விஷயம் பக்கத்தில் இருபவர்களில், குழந்தைகளோ, வயசானவர்களோ அல்ல, அப்படி இருந்தால் அவர்கள் கண்டிப்பாக என் பெர்த்திற்கு அடி போடுவார்கள்.

என் இடத்தில் போய் அமர்ந்தேன் ராகினி வரவில்லை, வெளியே சென்று வாட்டர் பாட்டில் வங்கி விட்டு வர அவள் வந்திருந்தாள். அழகான முகம், Straight செய்த தலை முடி, டி ஷர்ட், ஜீன்ஸ், காதிலே iPod, சுருக்கமாக நான் தினம் தினம் என் அலுவலகத்தில் காணும் ஒரு சராசரி சாப்ட்வேர் பெண். பார்த்த முதல் தருணத்திலேயே “அட சே, இப்படி ஆயிடுச்சே, என தோன்றியது.

முன்பெல்லாம் அழகான பெண்களை பார்த்தால் கப்பென்று பற்றிக்கொள்ளும், இப்போ ரொம்ப நமத்துப்போயிருக்கேனே, ஒருவேளை இந்த மாதிரி மாடர்ன் பொண்ணுங்கள பார்த்துப் பார்த்து போர் அடிச்சிருச்சோ? என நான் யோசித்துக்கொண்டிருக்கும் போது ஒரு நில நிற டி ஷர்ட் அணிந்த ஒருவன் என்னை பார்த்தபடியே சென்றான்.

யார் இவன் நம்மளையே பார்க்குறான், நம்ம ஆபீஸல வேலை பாக்குறவணா இல்லை நம்ம காலேஜ் பையனா. யோசிப்பதற்குள் அவன் விருட்டென்று சென்று விட்டான். யோசித்தபடியே அவளை பார்க்க அவளோ எங்கோ ஜன்னலில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள், அவள் என்னை பார்த்தால் ஒரு “ஹலோ” சொல்லலாம் என நினைத்துகொண்டிருக்க ரயில் கிளம்பியது, ஒரு ராத்திரி முழுசா இருக்கு எப்படியும் ஒருதடவையாவது பேசிடலாம் என முடிவு செய்தேன்.

ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அந்த நீல நிற டி ஷர்ட் என்னைப் பார்த்தபடி என்னருகில் வந்தான்,

“சார் ஒரு சின்ன ஹெல்ப்!! எங்க அப்பா அவர் ஹர்ட் பேஷண்ட், அவருக்கு அப்பர் பெர்த் ஏற முடியாது, கம்பார்ட்மென்ட் புல்லா பார்த்துட்டேன் நீங்க மட்டும் தான் கொஞ்சம் young person, exchange பண்ண முடியுமா”

கொஞ்சம் நேரம் ஒரு பொண்ணை பார்த்தது அந்த ஆண்டவனுக்கே பொறுக்கல போல, ஹர்ட் பேஷண்ட்டுன்னு வேற சொல்றான், என்னால் மறுக்க முடியவில்லை

“No problem!!! சீட் எங்க” நான் கேட்க

அவன் முகத்தில் ஒரு சந்தோஷம், “ரொம்ப தேங்க்ஸ், இந்த கம்பார்ட்மென்ட் தான், சீட் நம்பர் 40”

என் பையை எடுத்துக்கொண்டு ராகிணிக்கு டெலிபதி மூலமாக Bye சொல்லிவிட்டு நாற்பதாம் நம்பர் சீட்டிற்கு வந்தேன், அப்போது தான் தெரிந்தது, இது வெறும் அப்பர் பெர்த் கிடையாது சைடு அப்பர். மறுபடியும் நாலா மடிச்சு படுக்கணுமா, என் விதியை நொந்து கொண்டே மேல ஏறி உட்கார செல்போன் என்னை அழைத்தது. யாரென்று பார்த்தால் அம்மா.

வழக்கமாக ரயில் ஏறியவுடன் அம்மாவிடம் call செய்து சொல்லுவேன் இந்த முறை  ராகினியை பார்த்துக்கொண்டே அம்மாவை அழைக்க மறந்து விட்டேன்.

“ஹலோ அம்மா “

“என்னடா ட்ரைன் ஏறிட்டியா”

“ட்ரைன் கிளம்பிடுச்சு!!! உன் ட்ரைன் எங்க போகுது“

“இங்க தான் செங்கல்பட்டு கிட்ட போய்க்கிட்டு இருக்கு, அப்புறம் என் டிக்கெட் இருக்குல... அது RACல இருந்து இன்னைக்கி தான் confirm ஆச்சு.... ஆனா அப்பர் பெர்த்துதான் கிடைச்சுது, என்னால எப்படி ஏற முடியும், அப்புறம் இங்க உன் வயசுல ஒரு பையன் லோவர் பெர்த்துல இருந்தான்...... அவன் கிட்ட, 'தம்பி என்னால மேல ஏற முடியாதுப்பா கஷ்டம்ன்னு' சொன்னேன், அந்த பையன் அவன் பெர்த்தை கொடுத்துட்டான், காலையில நாகர்கோயில் போயிடும், நீ பெங்களூர் போனவுடனே call பண்ணு சரியா?”

என்னால் அதற்கு மேல் பேசமுடியவில்லை “சரிம்மா காலையில call பண்றேன்”

செல்போனை வைத்துவிட்டு காலை நாலாக மடித்து மேலே பார்த்தேன் ஆண்டவன் இருகிறானா என்று, ரயில் கூரைதான் தெரிந்தது, கேமரா அப்படியே என்னை விட்டு zoom out ஆகி பின்னால் கம்பார்ட்மென்ட்டை விட்டு வெளியே செல்ல ரயில் வில்லிவாக்கத்தைத் தாண்டி பெங்களூர் சென்று கொண்டிருந்தது.


Image Courtesy : http://www.flickr.com/photos/godvivek/483490156/


8 comments:

 1. interesting post.. sema strong foundation ulla subject.. expected many fire crackers.. but tak nu mudinja madiriye oru feeling

  ReplyDelete
  Replies
  1. thanks da !!!yes eluthum podhu i also had a small feel like wht u have said.... oru thadavai try panni parppomnnu thaan :)

   Delete
 2. had a feel of watching a short film ragu... awesome..

  ReplyDelete
  Replies
  1. Thanks Machi!!! hope someone makes a short film on this story :)

   Delete
 3. so simple but very cute. keep writing

  ReplyDelete
 4. Replies
  1. Thanks a lot rajendran :) pls do have a look at my other blog posts and let me know your thoughts.

   Delete

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More