Links

Thursday, January 17, 2013

தலைவா !!!!!


சின்ன வயசில் தலைவர் படத்தைப் பார்த்துவிட்டு, பள்ளியில் சிகரட்டை போல் பென்சிலை பாவித்து தூக்கிப்போட்டு பிடித்ததுண்டா ? பென்சில் வொர்க் அவுட் ஆகவில்லை என்றால் ரப் நோட்புக் பேப்பரை கிழித்து சிகரட் தயார் செய்ததுண்டா? கமல் என்ன தான் சூப்பராக நடித்தாலும் “சூப்பர் ஸ்டார் மாதிரி வருமாடா” என்று நண்பர்களோடு சண்டை போட்டதுண்டா? படையப்பா படத்தில் தலைவர் சொல்லும் எல்லா வசனமும் அத்துப்படியா ?


இக்கேள்விகளுக்கு பதில் ஆம் என்றால் நீங்களும் என் போல் ரஜினி ஒரு என்ற சொல்லில் மயங்கியவன். இத்தனை நாளா நமக்கு இவ்வோளோ செஞ்சுருக்கானே இவனுக்கு எதாவது செய்யணும் என்று ஒரு முறை தலைவர் என்னை குறி வைத்தார், அதுவே இந்த பதிப்பின் நோக்கம்.... இது கதையல்ல நிஜம்!!!


சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த விஷயம் சாப்ட்வேர் வேலையில் நொந்து நூடுல்ஸ் ஆன சமயம்.

“அம்மா நான் MBA படிக்கலான்னு இருக்கேன்” நான் சொன்னதை கேட்டு அம்மாவுக்கு பயங்கர ஆச்சரியம், அப்பாவுக்கோ பயங்கர கோபம்

“டேய் என்னடா புதுக்கதை சொல்ற”

“இல்லப்பா MBA படிச்சா நல்ல value….

“அது தெரியும் இப்போ என்ன திடீர்ன்னு...” என அப்பா கேட்க அம்மா குறுக்கிட்டாள்

“சரி உன் ஸ்கூல் காலத்துலேருந்து படி படின்னு நாங்க சொன்னபோது நீ கேட்டதே இல்லை, வாழ்க்கையல மொத தடவையா நீயே படிக்கணும்னு சொல்ற... சரி சிக்கிரம் எங்க சேரணும் என்ன பண்ணும் எல்லாத்தையும் பாரு”

ஹை கோர்ட் கோபப்பட்டாலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு சாதகமாக அமைந்தது.

ஆனால் MBA படிப்பதை விட அதை படிக்க ஒரு கல்லூரியில் சேருவது எப்படி பட்ட ஒரு அப்பாட்டக்கரான விஷயம் என்பது அப்புறம் தான் தெரிந்தது.

CAT, GMAT, JMET, XAT, CMAT, SNAP....  இதெல்லாம் MBA படிக்க நாம் எழுத வேண்டிய பரிட்சைகள், இதில் சில பரிட்சைகளின் full form கூட எனக்கு இன்னவரை தெரியாது. இப்பரிட்ச்சைகளில் பிரதானமானது CAT, என்னைக் கேட்டால் இந்த பரிட்சைக்கு DINOSAUR என்று பெயர் வைத்திருக்கலாம்.

இதெல்லாம் எப்படி படிக்கிறது என யோசிச்ச போது, என் அலுவலகத்தில் இருந்த ஒரு வட இந்திய நண்பன் துணைப் புரிந்தான். இதற்காக பல கோச்சிங் கிளாஸ் இருப்பதாகவும் அங்கு சேர்ந்தால் எல்லாம் சொல்லிக்கொடுப்பார்கள் என்றான். கோச்சிங் கிளாஸ் என்றவுடன் பிளஸ் டூவில் பெண்களை பார்பதற்காகவே சேர்ந்த கோச்சிங் கிளாஸின் ஞாபகங்கள் மனதில் ஓடின.

அடையாரில் ஒரு சென்டரில் சேர்ந்தேன்,

“நாளைக்குக் காலையில வந்திருங்க, அந்த batch ஆரம்பிச்சு two classes தான் போயிருக்கு, you can catch up”

முதல் நாள் காலையில் அடித்துப் பிடித்து சென்றேன் வழக்கம் போல் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து வகுப்பை நோட்டம் விட்டேன், சும்மா சொல்லக் கூடாது வகுப்பில் மூன்று அழகான பெண்கள்.

“டேய் இதே மாதிரி பிளஸ் டூ entrance கோச்சிங் போய் கோட்டை விட்ட, மறுபடியும் வேண்டாம்” என் மனசாட்சி வடிவேலு ஸ்டைலில் அழுக, சரி உருப்படுவோம் என முடிவெடுத்தேன்.

சிறிது நேரத்தில் வகுப்பு நிரம்ப முதல் நாள் பாடம் ஆரம்பமானது, கையில் ஏதோ ஒரு பேப்பர் கொடுத்து அதில் இருக்கும் சில கணக்குகளை செய்ய வேண்டுமாம், எல்லாரும் ஏதோ செய்ய முற்பட எனக்கோ எங்கு ஆரம்பிப்பது என்ன செய்வது, இது என்ன கணக்கு என ஒன்றும் புரியவில்லை.

இதற்க்கு முன் நான் கடைசியாக நான் படித்த கணக்குப் பாடம் Engineering Mathematics-3, சுருக்கமாக M3, “M3 கிளியர் செய்வது எப்படி!!!” என புத்தகம் எழுதும் அளவுக்கு Strong Foundation, மூன்றாம் செமஸ்டர் பேப்பரை 5 முறை எழுதி எட்டாவது செமஸ்டரில் என் பேப்பரை காண சகிக்காமல் Anna University என்னை பாஸ் செய்து வைத்தது.

இப்படி பட்ட எனக்கு அந்த கணக்கு First Ball yorker போல் இருந்தது, சிறிது நேரம் கழித்து,

“Have you solved the problem?” என அங்கு வந்த ஆசிரியர் கேட்டதற்கு

“இதற்கு problem என பேரு வச்சவனை முதல்ல கண்டுபிடிக்கணும்” என மனதில் தோன்றியது.

ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்து

“Sir If we use Binomial Thoerem we can find the coefficient of the missing factor...”என ஆரம்பித்தபோது எனக்கு “Cosmic Energy Coupled With Kinetic Energy in the evolution of mankind with the program of Java” போல் இருந்தது.

நான் மட்டும் தான் இப்படி என யோசித்த போது எனக்கருகில் ஒருவன் ரொம்ப தீவிரமாய் அந்த கணக்கை ... சாரி Problem ....அதை solve செய்துகொண்டிருந்தான்,  

“ஹலோ உங்களுக்கு புரிஞ்சுதா?” என நான் கேட்க

“இல்லங்க!!! நான் நேத்து கிளாசுக்கு வரல, ஒண்ணுமே புரியல, நேத்து கிளாசுல தான் இதை டீச் பண்ணியிருக்கணும்” என்றான்

“அப்பாடா !!! நான் மட்டும் தான் பல்புன்னு நினைச்சேன், ” மனதிற்குள்ளே சொல்லிகொண்டேன்.

“அப்படியா, நானும் புதுசு, இன்னைக்கி தான் ஜாயின் பண்ணினேன் எனக்கும் ஒன்னும் புரியல, anyways I am Raghu”  என்றேன்

“I am Arun” என்று பதில் அளித்தான்

“வொர்க் பண்றீங்களா?” என நான் கேட்க

“எஸ் TCS!! நீங்க? “

“நானும் உங்கள போல தான் சாப்ட்வேர், Keaneல  வொர்க் பண்றேன்”

“Keane, கேள்வி பட்டிருக்கிறேன், நுங்கம்பாக்கம் தானே உங்க ஆபீஸ் “

“எஸ் எஸ்... CAT first டைம் ?“

“ஆமா !!! என்ன பண்றதுனே தெரியல.... எல்லாம் ஆண்டவன் கையல இருக்கு” என வானத்தைப் பார்த்து சொன்னான்.

ஒரு சில வாரங்களில் நானும் அருணும் நல்ல நண்பர்களானோம், ஒவ்வொரு வாரமும் mock CAT என்ற ஒன்று நடைபெறும், அதாவது இந்தியாவில் என்னைப் போல் பைத்தியம் பிடித்த... சாரி MBA படிக்க விரும்பும் அனைவரும் ஒன்று கூடி CAT போலவே ஒரு பரிட்சையை எழுதுவார்கள், அதில் வரும் மதிப்பெண்களை வைத்து நமக்கு இறுதி பரிட்சையில் எவ்வளவு தேறும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒவ்வொரு வாரமும் அருண் என்னை அழைப்பான்

“ரகு இந்த Mock CAT எப்படி ?”

“ரொம்ப மோசம் அருண்... உங்களுக்கு எப்படி ?”

“நீங்க வேற, நான் காலி? “

இருவரும் எங்கள் பரிதாபங்களை பகிர்ந்த பிறகு,

நான், “அருண் நாம தேறுவோமா,  எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு, போறப் போக்க பார்த்தா B ஸ்கூல் பக்கம் போகவே முடியாது போல”

அப்போது தான் தலைவர் முதன் முதலாக அருண் மூலமாக வேலையை ஆரம்பிக்கிறார்

“ரகு, தலைவர் படம் பார்த்திருக்கீங்களா ?”

“என்ன கேள்வி இது அருண்... ரஜினி படம் ஒண்ணுவிடாம பார்த்திருக்கேன் “

“ஒரு படத்துல ஒரு punch dialogue இருக்கு ‘கிடைக்கிறது கிடைக்காம இருக்காது’, அது போல தாங்க இந்த B ஸ்கூல்... கிடைக்கன்னும்னா கண்டிப்பா கிடைக்கும்”

“அருண் அந்த வசனத்தோட இரண்டாவது பார்ட் தாங்க பிரச்சினையே....”

“என்ன பிரச்சனை ?”

“ ‘கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது’.... இப்படிதாங்க வாழ்க்கைல பல விஷயங்கள் கிடைக்காம போயிருச்சு”

“பாசிடிவா யோசிங்க... நான்  பிரச்சனை வரும் போது இந்த வசனத்த தான் சொல்லிப்பேன் ALL IS WELL மாதிரி”

“ஏதோ அருண் கெடைச்சா சரி”

இப்படி சில வாரங்கள் செல்ல ஒரு நாள் அருண் “இந்த saturday ஒண்ணா சேர்ந்து prepare பண்ணுவோமா before sunday`s mock CAT?”

எனக்கும் அது சரி என தோன்றியது, இருவரும் சேர்ந்து இந்த பூணைக்கு மணி கட்டும் வித்தையை கற்க முற்பட்டோம், Aptitude, Reasoning என பல விஷயங்கள் பேசி Tired ஆகிவிட்டோம்,

“ரகு கொஞ்ச நேரம் பிரேக் எடுப்போம்” என டிவியை தட்ட... சன் டிவியில் படையப்பா, CAT எல்லாம் அப்புறம் என முடிவு செய்தோம், படையப்பாவை தொடர்ந்தோம்.

என்னைப் போலவே அருணுக்கும் படையப்பாவின் வசனங்கள் அத்துப்படி, கணிதம் Aptitude, Reasoning என பேசிக்கொண்டிருந்த நாங்கள் பாஷா, முத்து, சிவாஜி என பேச ஆரம்பித்தோம். இறுதியில் இன்றைய தேதியில் டிவியில் சிவாஜி போட்டால் கூட பலர் பார்க்கமாட்டார்கள் ஆனால் படையப்பாவோ பாஷாவோ போட்டால் எல்லாரும் பார்ப்பார்கள் என்ற கருத்தை ஆணித்தனமாக நம்பினோம்.

அடுத்த நாள் எழுதின MOCK CAT அற்புதமாக சென்றது, எனக்கே ஆச்சரியம் வழக்கமாக புஸ் ஆகும் பரிட்சை பின்னி பெடல் எடுத்தது. கனவில் கூட எதிர்பார்க்காத percentile எனக்கு கிடைத்தது. தலைவர் படத்த பார்த்துட்டு போன நேரம் நல்லா வொர்க் அவுட் ஆகுது என நம்பினேன், அருணும் அதை ஆமோதித்தான்.

வீட்டில் இனி prepare செய்யும் போது அண்ணாமலையில் வந்த “வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்” படையப்பாவில் வந்த “வெற்றிக் கொடி கட்டு “ போன்ற பாடல்கள் சத்தமாக ஒலிக்க ஆரம்பித்தன.

அருண் ஒரு படி மேலே சென்று “போடா!!! அந்த ஆண்டவனே என் பக்கம்” என்ற தலைவர் வசனத்தை ரிங் டோனாக வைத்தான்.

இறுதியாக அந்த நாளும் வந்தது என் பல மாத உழைப்பைக் காட்டும் நேரம். பல பரிட்சைகள், பல விண்ணப்பங்கள், பல ஆயிரம் செலவானது.

ஆனால் எப்போதும் போல் பரிட்சையின் முடிவுகள் புஸ்!!!... SNAP தவிர வேறு எதிலும் எனக்கு நல்ல ஸ்கோர் வரவில்லை, அருணுக்கோ XAT, JMET  கைகொடுத்தது.

SNAP ஸ்கோரை அணுமதிக்கும் கல்லூரிகளில் இரண்டில் மட்டுமே நான் விண்ணப்பிக்க அதில் ஒன்றில் மட்டுமே எனக்கு நேர்காணலுக்கு அழைப்பு வந்தது, அருண் கைவசம் ஒரு நான்கைந்து அழைப்புகளை வைத்திருந்தான்.

“அருண் ஒரே ஒரு call, இதை எப்படி convert பண்றது, காலின்னு நினைகிறேன்”

“ரகு இந்த காலேஜ் நல்ல காலேஜ் தானே convert பண்ணலாம், தலைவர் சொன்னத ஞாபகம் வச்சுகோங்க ‘கிடைக்கிறது கிடைக்காம இருக்காது’ இந்த call வந்திருக்குன்னா காரணமில்லாமல் இல்லை “

நேர்காணல் தேதியும் வந்தது மார்ச் 7, என் பிறந்த நாள், இதை நான் அருணிடம் சொல்ல 

“இதை விட நல்ல சகுனம் கிடையாது, தலைவர் சொன்ன மாதிரி ‘அந்த ஆண்டவனே உங்க பக்கம் இருக்கான்’... All The Best”

March 7 2010

நேர்காணலுக்கு என்னைப் போல் பலர் வந்திருக்க அதில் தமிழ் முகம் எதாவது தெரிகிறதா என பார்த்தேன் தென்படவில்லை, எங்கு பார்த்தாலும் வடஇந்தியக் காற்று, ஹிந்தி பேச்சு எனக்கோ ஒன்றும் புரியவில்லை. நம் தமிழர்கள் ஏன் இந்த MBA மீது அப்படி ஒரு அக்கறை காட்டுவதில்லை ?

சுற்றி இருக்கும் எல்லோரும் Finance, Mortage, Mid Cap என ஏதேதோ பேச ஆரம்பிக்க, “கடவுளே, மொக்கையா ஏதாவது பேசி  பெருசா பலப் ஏதும் வாங்கக் கூடாது” என முடிவெடுத்து அமைதியைக் கடைபிடித்தேன்

அந்த நேரமும் வந்தது என் நேர்காணலில் இரண்டு பிரிவு உண்டு ஒன்று மீன்சந்தை போல் இருக்கும் Group Discussion சுருக்கமாக GD, இன்னொன்று Verbal Diarrhea  என சொல்லப்படும் Personal Interview.

இப்போது என்னுடன் ஒரு ஆறு பேரையும் சேர்த்து மீன்சந்தைக்கு அழைத்தார்கள். உள்ளே சென்ற பிறகு தான் சந்தை அன்றைக்கு விடுமுறை என்று அறிவித்தார்கள்

ஆம் உள்ளே சென்றவுடன் அங்கு Interview Panelலில் இருக்கும் ஒருவர்

“See guys im quite fed up of this group discusssion process, the previous batch performed very badly, so lets make it an Extempore” எனக் கூற

Extemporeஅப்புடீனா ஒ!!! இதுல டான்ஸ் வேற ஆட சொல்லுவாங்க போல என கௌண்டமணி ஸ்டைலில் யோசித்தேன் (அதுவும் தலைவர் படம் தான்)

நான் இப்படி பேந்த பேந்த முழிப்பதை பார்த்து விட்டார் போல Extempore என்றால் என்ன என்பதை விளக்கினார்.

1. எல்லோர் முன்னிலையில் நாம் சென்று நிற்க, நடுவர்கள் ஒரு தலைப்பைக் கொடுப்பார்கள்.

2. அந்த தலைப்பை சொன்னவுடன் அதை பற்றி மூன்று நிமிடங்கள் இடை விடாமல் பேச வேண்டும்.

3 ஒரு முறை பேசிய விஷயத்தை மறுபடியும் கூறக் கூடாது.

ஆகா GDயில் ஏதாவது பக்கத்தில் இருப்பவன் பாயிண்ட்டை திருடி மழுப்பிவிடலாம் இதில் முடியாதே என நினைத்திருக்கும் போதே முதல் மாணவனை அழைத்தார்.

அவனைப் பார்த்து அவர் அருகில் இருந்த கிளாசை காண்பித்தார் அதில் பாதி Coca-cola இருந்தது, “ Your time starts now”  என்றார்

“பாதி கிளாஸ் கூல்ட்ரிங்க்ஸ் இருக்கு, மீதிக்கு சரக்கு நிரப்பி அடிக்கலாம் இதுல என பேச முடியும்”,  என யோசித்தபோது, அந்த மாணவன் “Glass is half empty half full...optimism, Positive attitude... negative way of looking” என அந்த தலைப்பை பின்னி எடுத்துவிட்டான்,

“எத்தனை தடவை கிளாஸ் use பண்ணியிருக்கோம் நமக்கு இது ஒரு தடவை கூட தோணலயே” என மனது சிந்திக்க ஆரம்பித்தது.

அடுத்த மாணவன் வர அவனுக்கு தலைப்பு “Test vs T20”... எனக் கூற, எனக்கோ “சார் இந்த topicல நான் பேசுறேன் சார் பல மாட்சுகள் பார்த்து பல எக்ஸாம் கோட்டை விட்டவன் சார் நான்,....... ஒரு முழு டெஸ்ட் மேட்ச் பார்கிறவன் சார் நான்” என மனது சொல்லத் துடித்தது ஆனால் அமைதி காத்தேன். அந்த மாணவனும் அந்த தலைப்பிற்கு ஏற்றார் போல் அற்புதமாக பேசினான்.

மூன்றாவது தலைப்பு “Economic Recession vs GDP” ...இந்த தலைப்பு எனக்கு வந்தால் நான் காலி என நினைத்தேன். அதே போல் இவன் கொஞ்சம் திக்கி தெனற ஆரம்பித்தான் நடுவில் சில வினாடிகள் மௌனம் சில வார்த்தைகள் மீண்டும் சொல்லி, அவனால் அந்த தலைப்பில் பேச முடியவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஆண்டவா!!! இந்த மாதிரி நமக்கு வந்திடக்கூடாது என வேண்டிக்கொண்டேன்

அடுத்ததாக நான், உலகிலுள்ள எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டேன், கோர்ட்டில் குற்ற்றவாளி கூண்டில் நிற்பதை போல் நான் நிற்க, அந்த நடுவர்கள் என்னை பார்த்தார்கள் ஏதோ பேசினார்கள் பின்பு தான் அந்த வார்த்தை என் காதில் ஒலித்தது

“Rajinikanth.... your time starts now”

மூன்று நிமிடங்கள் என்ன மூன்று வருடங்கள் பேசுவேன், இன்று வரை நான் அங்கு முழுவதுமாக என்ன பேசினேன் என்பது ஞாபகம் இல்லை, ஆனால் நான் பேசும் போது எனக்குள் கேட்ட குரல் மட்டும் நன்றாக நினைவில் உள்ளது, அவன் என் மனசாட்சி, அவன் சத்தமாக கூறினான்.

“தலைவா !!!!!!!!!!!”

5 comments:

 1. பரீட்சைக்குப் போகும் முன் வெறி ஏற்றுவதற்காக படையப்பா, அண்ணாமலை பாடல்களைப் போட்டுக் கேட்டு விட்டு அதே ஃபீலிங்கோடு போய்ப் பரீட்சையை வெளுத்துக் கட்டின அனுபவங்கள் எனக்கும் உண்டு.. M2 அரியர் கிளியர் பண்ணினது அப்படித்தானே :-) செம !

  ReplyDelete
  Replies
  1. @மதி : ரஜினி பாடல்களில் வெறியேற்றுவோர் சங்கத்திற்கு வருக... அது M2 இல்ல M3 அதுக்கு ஒரு கட்டத்துல்ல நான் கேட்ட பாடல் முத்து படத்தில் வரும் "விடுகதையா" பாடல் .. M3 பத்தி ஒரு தனி கதையே எழுதலாம் :)

   Delete
 2. kanna adavan nalavagala sothipan ana kai vida mattan...

  ReplyDelete

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More